போலீஸ் ஆதமின் மனக்குமுறல்களும் ஆலோசனைகளும்
சென்னையில் பணிபுரியும் நமது ஊரைச் சேர்ந்த 'போலீஸ் ஆதம்' தன் மனதில் உள்ள சில ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் நமது ஊர் மாணவர்களுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
அவருடைய ஆலோசனைகளை இந்த இளைஞர் மன்றம் மூலமாக வரும் காலங்களில் இன்ஷா அல்லாஹ் செயல்படுத்த முயற்சி செய்வோம்!
இதோ ஆதமின் வரிகள்...
•••••••••••••••••••••••••••••••••••••
"பல வருடங்களாக HPL என்று கிரிக்கெட் மட்டுமே விளையாடுகிறோம். அதுவும் கடந்த சில வருடங்களாக மிகவும் விமர்சையாக நடக்கிறது. இது வருடத்திற்கு ஒரு முறை எல்லோரும் மகிழ்ச்சியாக சந்தோஷமாக விளையாடுகிறோம்.
ஆனால் இந்த விளையாட்டை விளையாடி யாராவது முன்னேற்றம் கண்டார்களா? யாராவது சான்றிதழ் பெற்றுள்ளனரா?
இல்லை என்றால் ஏன்?
மகராஜபுரத்தில் நமது தெருவை தவிர்த்து மற்ற தெருக்களில் நிறைய பேர் (மத்திய, மாநில) அரசாங்க வேலையில் இருக்கிறார்கள். அப்படி இருப்பவர்களில் நிறைய பேர் விளையாட்டு சான்றிதழ் வைத்துக் கொண்டு வேலையில் சேர்ந்திருக்கிறார்கள்.
ஆனால் நாம் வருடத்திற்கு ஒரு முறை என்று இல்லாமல் வருடம் முழுவதும் ஒரே விளையாட்டையே விளையாடுகிறோம். வருங்கால சிறுவர்களும் அதையேதான் விளையாடுகிறார்கள்.
நல்ல வேளை எனக்கு இந்த விளையாட்டை விளையாட தெரியவில்லை. நான் பல நேரங்களில் இந்த விளையாட்டை விளையாடாமல் நீச்சலடிப்பதற்காக பல இடங்களுக்கு சென்று விட்டேன். அதனால்தான் என்னவோ எனக்கு போலீஸ் தேர்வில் கயிறு ஏற கஷ்டமில்லாமல் இருந்திருக்கலாம்.
நான் சொல்ல வருவது என்னவென்றால் ஒரே விளையாட்டு என்று இல்லாமல் பல விளையாட்டை அறிமுகம் செய்யுங்கள். நன்றாக விளையாடுங்கள். இதன் மூலம் நாம் இல்லை, நமது பையன்களும் இல்லை, அதன் பிறகு வரும் சந்ததியினர் மிகவும் பயன் பெறுவார்கள்.
எனக்கு தெரிந்து கிரிக்கெட் விளையாடி சான்றிதழ் பெற்று அதன் மூலம் நல்ல நிலைக்கு சென்றவர்கள் யாரையும் எனக்கு தெரியாது.
ஆனால் கிரிக்கெட் இல்லாமல் மற்ற விளையாட்டுக்களில் சான்றிதழ் பெற்று, அதன் மூலம் வேலைக்கு வந்து இப்போதும் அவர்கள் அந்த வேலையில் இருந்து கொண்டு, சம்பளமும் பெற்று கொண்டு விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
யாருக்கு என்ன திறமை இருக்கு என சிறு வயதில் அவர்களுக்கு தெரிந்தால் அந்த திறமையைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வழி கிடைக்கும்.
விளையாட்டின் மூலமே முன்னேற முடியும் என்றில்லை. எனக்கு தெரிந்த விஷயத்தை நான் சொல்கிறேன். அவ்வளவுதான். நமக்காக இல்லை, நமது வருங்கால மகவை மைந்தர்களுக்காக..."
குறிப்பு: தினமும் சிறிது நேரம் ஓடுங்கள், உங்கள் உடல் நலம் பேணுவதற்காக.!
அன்புடன்.,
முஹம்மது ஆதம்
சென்னை
Super
ReplyDelete